Tuesday, June 3, 2008

நுவோ சினிமா பெரடிசோ


திரைப்படங்கள் நம்முள் கிளர்த்தும் நுண்ணிய நினைவுகள்- நம் பெற்றோரோடு நாம் கண்டு களித்த முதல் திரைப்படம், நம் மனத்துக்கு பிடித்த நடிகர்கள், வசனங்கள், காட்சி அமைப்புகள், நட்பு வட்டாரத்துடன் சிலாகித்த திரைப்படங்கள், காதலியோடு பகிர்ந்து கொண்ட திரை நினைவுகள் என வாழ்வின் பெரும்பகுதியை நிரப்பி நிற்கும், துருத்தல்கள் இன்றி.

நமக்கு நினைவற்ற கைக்குழந்தை வயதில், நம்மோடு சென்றதாக அம்மாவோ பாட்டியோ சொல்லும் திரைப்படங்களை இப்போது காணுகையில் நம்முள் தோன்றும் குறுகுறுப்பின் நிறத்தை எந்தத்தூரிகையும் வடித்துத்தர இயலாது. மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு, செவிவழி சிலாகிப்புகள், எழுச்சிகள் மற்றும் அதன் வாழ்வியல் தாக்கங்கள் என நம்முள் நிறைந்துநிற்கும் படங்களின் எண்ணிக்கையை 100 அல்லது 200 என எளிதில் தொகுத்துவிடலாம்.

நினைவு தெரிந்த நாள் முதல் திரைப்படங்களை காண்பிப்பதையே வாழ்க்கையாக கொண்ட ஆப்பரேட்டரின் மனவெளியில் ததும்பும் எண்ணவோட்டங்களை மொழிபெயர்க்க நேர்ந்தால், அது வெவ்வேறு ஒளிப்புலத்தில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் நிகழ்த்திச்சென்ற பெருங்காப்பியமாய் முடிவுறும். தினமும் மூன்று நேரம் ஒரே திரைப்படத்தை மாதக்கணக்கில் பார்க்கும் மனிதனுக்கு மனப்பிறழ்வு ஏற்படாமலிருந்தால் தான் அதிசயமே!

காலம் ஒரு தவிர்க்கமுடியாத காரணி, வாழ்க்கையாகட்டும், படைப்புகளாகட்டும், வரலாறாகட்டும், அதன் வீரியத்தை குறைத்து மதிப்பிட இயலாது. துளிகள் திரண்டு புதுப்புனலாகி மடையுடைத்து வரும் காட்டற்று வெள்ளமென நம் வாழ்வின் கரைகளை கரைத்துச் செல்லும் காலத்தின் வெவ்வேறு படித்துறைகளில் புனலாடி, விளையாடி கரைநின்று நீரோட்டம் கண்ணுறுகையில் மனதில் நிறையும் வெறுமையின் ஆழத்தில் தொக்கி நிற்கும் ஒருதுளி ஈரமென விகசிக்கும் கடந்து வந்த வாழ்க்கை.

காலமும் காவியமும்(திரைக்) இருபுலமாக கொண்டு வாழ்வியல் ஈரங்களை மனிதநேயப் பார்வையில் நிரவிச்செல்லும் திரைப்படைப்பு நுவோ சினிமா பெரடிசோ.  படைப்புகளின் வெற்றி அதன் விவரனையில் இருக்கிறது. கதை மாந்தர்கள் இயங்கும் கால கட்டத்திற்கான பின்புல அமைப்பும், அவர்களின் பார்வையின் வழியே பதிவுசெய்யப்படும் படிமங்களும் என ஒரு படைப்பிற்கான நுண்ணிய விவரனைகள் அந்த படைப்பின் தரத்தை மெருகூட்டும் ஊக்கிகள். 

ஒரு திரையரங்கை பிரதான பாத்திரமாக்கி உலாவ விட்டுருக்கிறார் இயக்குனர். 40களில் இருந்து 90 வரையிலான அந்த திரையரங்கின் வாழ்வோடு இழைந்தோடும் பல கதைமாந்தர்கள், அவர்களின் சமுதாய அமைப்பு, வளர்சிதை மாற்றங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி என ஒரு முழுவட்டத்தை பூர்த்தி செய்து ஒரு முழுமையான படைப்பை நமக்களித்திருக்கிறார் இயக்குனர். 

குழந்தை இல்லா திரையரங்கு ஆபரேட்டருடன் நட்பு கொள்ளும் தந்தையற்ற சிறுவனின் வாழ்க்கை பயணம் அந்த திரையரங்கின் இருக்கைகளினூடாக, திரையில் பதியும் ஒளிக்கீற்றினூடாக, அந்த அரங்கை நிறைக்கும் சிகரெட் புகையினூடாக, அவன் வயதோடு சேர்ந்து குறையும் நடிகைகளின் உடைகளினூடாக, அவனுக்கென கவலைப்படும் அல்பிரெடோ எனும் ஆபரேட்டரினூடாக மதை வருடும் விதமாய், அதுவரை வெளியாகியுள்ள இத்தாலியன் திரைப்படங்களுக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் அழுத்தமாக உருவாக்கியிருக்கிறார் திரைப்படத்தை, இயக்குனர் Giuseppe Tornatore


புகழ்பெற்ற இத்தாலியன் இயக்குனருக்கு அவர் கிராமத்தை சேர்ந்த அல்பிரெடோ என்ற ஒருவரின் மரணச் செய்தி வந்தடைகிறது. அவரின் நினைவில் மூழ்கும் இயக்குனரின் நினைவுத் தொகுப்பாக, நிகழ் நின்று பின்நோக்கி பார்க்கும் அவரின் சிறுவயது வாழ்க்கையின் ஆவணமாக நகர்கிறது படைப்பு. மிக இலாவமாக திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர். திரையரங்கு ஒரு உயிரோட்டமான படிமம், அதன் பரப்பில் மிளிறும் வெவ்வேறு சலனங்களாக அந்த ஊரின் மக்களை செதுக்கியுள்ளார். 

ஒரு தீ விபத்தில் அல்பிரெடோ கண்ணை இழக்க, சிறூவயதிலேயே ஆபரேட்டர் ஆகும் நாயகன், தன் பதின்ம வயதில் காதல் வயப்படுகிறான். அவன் வாழ்வின் நீள அகலங்களை அடைத்து நிற்கும் காதல் எனும் கனவை உடைத்து அவனை நகரத்து அனுப்புகிறார் அல்பிரெடோ. அவர்கள் காதல் கைகூடாமல் போக அல்பிரெடோ காராணமாக இருப்பது நாயகனுக்கு தெரிவதில்லை. அவரிடம் கொடுத்த வாக்கின்படி இருபது வருடங்களாக கிராமத்துக்கே வருவதில்லை அவன். அந்த காலகட்டத்தில் இத்தாலியின் மிகப்பெரும் இயக்குனராக பரிணமிக்கும் நாயகன், அல்பிரெடோவின் இறுதிச் சடங்கிற்காக கிராமத்துக்கு பயணிக்கிறார். 

சிறுவயது முதல் Toto கேட்டு நச்சரிக்கும் தணிக்கை செய்யப்பட்ட முத்தக்காட்சிகளின் தொகுப்படங்கிய பெட்டியை அவனுக்காக விட்டுச்சென்றிருப்பார் அல்பிரெடோ. அதை இயக்குனர் தன் வீட்டில் ஓட்டிப்பார்ப்பதாக முடிகிறது படம். 


சிலரது வாழ்க்கையில் இத்தகைய தந்தை மாதிரி ஆன்மாக்கள் மிகப்பெரும் பங்களீப்பை நிகழ்த்தியிருப்பார்கள். உங்கள் அண்ணனோ, தெருமுனை கடைக்காரரோ, பக்கத்து வீட்டு நண்பரோ, யாரோ ஒருவர் நமக்கான பாதையை செப்பனிடுவதில் அதிக உரிமை எடுத்துக்கொண்டு நம் நலனில் கவனம் செலுத்துவார்கள். அவர்களின் செயல் நம் விருப்புக்கு எதிராக அமைந்தாலும், அவர்களை மன்னிக்க முடியாமல் போனாலும், அவர்களை புறக்கணிக்க இயலாது. அத்தகைய ஒரு மனிதரை பற்றிய கதை இப்படம். 

காதல் தோல்வியால் வரும் வேகத்தில் வாழ்க்கையில் அவன் வெற்றி பெற்றிருந்தாலும், அவனது தனிப்பட்ட வாழ்க்கை ஒரு முடிவற்ற வட்டமாகவே இருக்கும். ஊருக்கு வரும் அவன் தன் பதின்ம வயது காதலியை சந்திக்கும்பொழுது, அல்பிரெடோ தான் அவர்களின் பிரிவுக்கு காரணமாக இருந்ததை அறியும் பொழுது அவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் சமைந்துவிடுகிறான். ஆனல் அவன் மீதான அவரின் அன்பை எள்ளளவும் குறைசொல்வதற்கில்லை. தந்தையற்றா சிறுவனுக்கு ஒரு அருமையான வழிகாட்டியாய் அமைந்து, தன் அகக்கண்ணால் அவன் வளர்ச்சியை கண்டு களிப்புற்று, வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அந்த மனிதர் மீது அபரிதமான மரியாதை பொங்குகிறது படத்தின் முடிவில். 

திரைப்படங்களை படிப்பவர்களுக்கு இது ஒரு அருமையான புத்தகம். அடிக்கு அடி அற்புதமாய் செதுக்கிச் சென்றிருப்பார் இயக்குனர். தவறவிடக்கூடாத அருமையான படைப்பு இது. தெளிவான ஓடையின் குளிர் நீரைப்போல தாகம் தணித்து அமைதி கொள்ளச்செய்யும் படைப்பு. அவரின் இறுதி ஊர்வலத்தன்று பாழடைந்த அந்த திரையரங்கும் இடிக்கப்படுகிறது, நம்முள் மெல்லிய வலிக்கீற்றை நிரப்பி தரையைத் தொடுகிறது அந்த திரை, Cinema Paradiso.